நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது பேசிக்கொள்வோம் - ரோஹித் சர்மா!

Updated: Fri, Sep 08 2023 22:31 IST
நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது பேசிக்கொள்வோம் - ரோஹித் சர்மா! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடக்க வீரராக நிரந்தர இடத்தை பிடித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்போது முன்னணி வீரராக விளையாடி வருகிறார். அவரோடு இணைந்து விராட் கோலியும் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். இந்த இரண்டு வீரர்களுமே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் அசைக்க முடியாத வீரர்களாக இருந்து வருகின்றனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்றாக இணைந்து 67 இன்னிங்ஸ்களில் 3,973 ரன்களை 63 ரன்கள் என்கிற சராசரி உடன் குவித்துள்ளனர். அதோடு இவர்கள் இருவரும் 14 முறை ஒருநாள் கிரிக்கெட்டில் நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர்.

ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 5,150 ரன்களையும், ஹசீம் அம்லா மற்றும் டீகாக் ஆகியோர் 4300 ரன்களையும் குவித்துள்ள வேளையில் அவர்களுக்கு அடுத்ததாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய ஜோடி தான் அதிக ரன்கள் அடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர்கள் களத்தில் ஒன்றாக பேட்டிங் செய்யும்போது எவ்வாறு பேசிக்கொள்வார்கள் என்பது குறித்து ரோஹித் சர்மா வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

இது குறித்து பேசிய அவர், “நானும் விராட் கோலி ஒன்றாக பேட்டிங் செய்யும்போது நாங்கள் எதிர்கொள்ளப்போகும் பந்து வீச்சாளர் எப்படி எங்களுக்கு எதிராக பந்து வீசுவார்? அவர்களுக்கு எதிராக நாம் எப்படி ரன்களை குவிக்கலாம் என்று பேசிக்கொள்வோம். அதோடு அணியின் ரன் குவிப்பிற்கு ஏற்ப அடுத்தடுத்த திட்டங்கள் என்ன? என்பது குறித்து களத்திலேயே முடிவு செய்து அந்த சவால்களை எதிர்கொள்வோம்.

ஒவ்வொரு தொடரிலுமே நாங்கள் எங்களது பார்ட்னர்ஷிப்பின் போது எதிர் அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்தும் அவர்களுக்கு எதிரான திட்டங்கள் குறித்து மட்டுமே பேசிக் கொள்வோம். அதனால் தான் எங்களால் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க முடிகிறது” என கூறியுள்ளார். தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் போஃர் சுற்று போட்டியில் பங்கேற்று விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை