ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர் - மெக் லெனிங்!

Updated: Tue, Feb 18 2025 10:39 IST
Image Source: Google

டபிள்யூபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற  4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களைச் சேர்த்தார்.

ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரேணுகா சிங், ஜார்ஜியா வர்ஹேம் 3 விக்கெட்டுகளையும், கிம் கார்த், எக்தா பிஸ்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வைட் ஹோட் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேனியல் வைட் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 81 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் ஆர்சிபி அணியானது 16.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் மெக் லெனிங், “இன்றைய தினம் எங்களுக்கு சிறப்பாக இல்லை. நாங்கள் நல்ல தொடக்கத்தையே பெற்றோம். ஆனால் அதன்பின் ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி எங்களை பின்னுக்குத் தள்ளினர். எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட முயற்சித்த நிலையில், ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டதால் ரன்களைச் சேர்க்க முடியவில்லை.

இருப்பினும் இப்போட்டியில் நாங்கள் இறுதிவரை வெற்றிக்காக கடுமையாக போராடினோம். ஆனால் நீங்கள் போட்டிகளில் வெற்றி பெற ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் நாங்கள் சிறப்பாக திரும்புவோம். இன்றைய போட்டியை பொறுத்தவரையில் ஆர்சிபி அணியானது எங்களுக்கு எதிராக அவர்களில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வெற்றிபெற்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை