அடுத்தாண்டு சேப்பாக்கிற்கு திரும்புகிறோம் - எம் எஸ் தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் 11 வருடங்கள் தோனியே கேப்டனாக இருந்திருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடும் ஒப்படைப்பதாக கூறி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஜடேஜா, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணிக்கிறார். ஆகையால் இவரும் நன்றாக கேப்டன் பொறுப்பை வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு அப்படியே மாற்றாக எட்டு போட்டிகளில் ஆறில் தோல்வியை தழுவி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு சிக்கலானது. முதல் எட்டு போட்டிகளுக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜடேஜா பகிரங்கமாக அறிவித்தார். மகேந்திர சிங் தோனி அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு வழி நடத்தினார்.
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு, தற்போது இரண்டாவது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. மேலும் கடந்த ஐபிஎல் தொடர் நான்கு மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில் தோனி கடைசியாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவார்.
அதன் பிறகு ஓய்வு பெற்று விடுவார் என பேச்சுக்கள் நிலவி வந்ததே இதற்கு முழு முக்கிய காரணம். இந்த வதந்திகளை தவிடுபொடியாக்கும் விதமாக, “நான் எனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தான் விளையாடுவேன். அது இரண்டு மூன்று ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை. இதுதான் என் முடிவு.” எனப்பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
ஒந்நிலையில் இன்று சென்னை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி, மீண்டும் ஐபிஎல் தொடர் பற்றியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றியும் பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், “12 வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல்வேறு வெற்றிகளை பெற்று மிகச் சிறப்பான அணியாக விளையாடி வருகிறது. கடந்த வருடம் சென்னையில் போட்டியில் நடக்கப்படவில்லை என்பது எங்களுக்கும் வருத்தம் அளிக்கிறது.
அடுத்த வருடம் மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்புகிறோம். தொடர்ந்து இதே போல் உங்கள் ஆதரவை கொடுங்கள். தோல்வியின் போதும் நீங்கள் கொடுக்கும் ஆதரவு எங்களுக்கு பெருத்த நம்பிக்கையை தந்து வருகிறது.” என்று தெரிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.