பிசிபி அறியாமைவுடன் நடந்துகொள்கிறது - முகமது அமீர கடும் தாக்கு!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவர் பாகிஸ்தான் அணிக்கு 36 டெஸ்ட், 61 ஒருநாள் போட்டி மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் முகமது அமீர், பாகிஸ்தான் பிரீமியர் லீக் மற்றும் பிற நாடுகளில் நடக்கும் டி20தொடரில் விளையாடி வருகிறார்.
இந்தநிலையில் பாகிஸ்தானில் நடக்க இருக்கும் உள்நாட்டு போட்டிக்கான ஒப்பந்தத்தில் முகமது அமீரின் பெயரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை முகமது அமீர் ஏற்க மறுத்துள்ளார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அதில் விளையாடவில்லை என்றால் உள்நாட்டு கிரிக்கெட்டில் இடம்பெறுவதன் பயன் என்ன? இந்த ஒப்பந்தத்தை தருவதன் மூலம் அவர்கள் என்னை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் அது நடக்காது.
உள்நாட்டு ஒப்பந்த பட்டியலில் எனது பெயரை சேர்ப்பதற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை தொடர்பு கொண்டிருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தில் உள்ளவர்கள் தங்கள் தரத்தில் நன்கு படித்தவர்களை கொண்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் இன்னும் அறியாமையுடன் நடந்துகொள்கிறார்கள். ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்கு எனது ஒப்பந்தம் வழங்கப்பட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஒரு இளம் வீரருக்கு எனது இந்த ஒப்பந்தத்தை வழங்கி உதவ வேண்டும்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன் என்ற உண்மையை அவர்கள் ஏற்கவில்லை. அதனால் தான் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.