சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக பிரையன் லாரா நியமனம்!

Updated: Sat, Sep 03 2022 19:20 IST
Image Source: Google

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிகரமான அணிகளில் ஒன்று. 2016இல் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது. அதன்பின்னர் 2018 ஐபிஎல்லில் கேன் வில்லியம்சன் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி ஃபைனல் வரை சென்றாலும், சிஎஸ்கேவிடம் ஃபைனலில் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

அதன்பின்னர் 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய 4 சீசன்களிலும் பெரிதாக சோபிக்கவில்லை. 2022 ஐபிஎல்லில் பிளே ஆஃபிற்குக்கூட முன்னேறவில்லை. சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி சிறப்பாக செயல்பட்டுவந்த நிலையில், 2021 ஐபிஎல்லில் அவரை நீக்கிவிட்டு டிரெவர் பேலிஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி சரியாக ஆடவில்லை.

அதன்விளைவாக 2022 ஐபிஎல்லில் மீண்டும் டாம் மூடி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு, லெஜண்ட் கிரிக்கெட்டர்களான பிரயன் லாரா பேட்டிங் பயிற்சியாளராகவும், முத்தையா முரளிதரன் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராகவும், டேல் ஸ்டெய்ன் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டனர். மிகப்பெரிய லெஜண்ட் பட்டாளம் பயிற்சியாளர் குழுவில் இருந்தபோதிலும், 2022 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃபிற்குக்கூட முன்னேறவில்லை.

இந்நிலையில், 2023 சீசனில் சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டாம் மூடியை தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, பிரயன் லாராவை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. 

பிரயன் லாரா கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த நிலையில், இந்த சீசனில் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியின் தலைமை பயிற்சியாளராக பிரயன் லாரா முதல் முறையாக செயல்படவுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை