WI vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!

Updated: Sun, Jun 19 2022 21:11 IST
West Indies Thrash Bangladesh Inside Four Days To Win 1st Test (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 16 ஆம் தேதி ஆண்டிகுவாவில் தொடங்கியது . இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக பிராத்வெயிட் 94 ரன்னும், பிளாக்வுட் 63 ரன்னும் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், எபாட் ஹுசைன், கலீல் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து, வங்கதேச அணி 2ஆவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இதில் கேப்டன் ஷகிப் அல் ஹசன், விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். நுருல் ஹசன் 64 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 63 ரன்னும் எடுத்தனர். மஹ்மதுல் ஹசன் ஜாய் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இறுதியில், வங்கதேச அணி 2ஆவது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அதன்பின்  84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வங்கதேச வீரர் காலித் அகமது சிறப்பாக பந்து வீசினார். முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த ஜான் கேம்ப்பெல், பிளாக்வுட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த நிலையில் இன்று 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜான் கேம்ப்பெல் - பிளாக்வுட் ஜோடி மேலும் விக்கெட்டை பறிகொடுக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 88 ரன்கள் அடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை