சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்ற விண்டீஸ் மகளிர்!
தென் ஆப்பிரிக்க - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான 5ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் அந்த அணியின் தொடக்க வீராங்கனை ரஷாதா வில்லியம்ஸ் அதிரடியாக விளையாடி 78 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீராங்கனைகள் லீசெல் லீ மற்றும் டஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டஸ்மின் பிரிட்ஸ் 48 ரன்களில் ஆட்டமிழக்க, லீசேல் லீ அரைசதம் அடித்து அசத்தினார்.
ஆனால் பின்னர் வந்த வீராங்கனைகள் சரிவர சோபிக்காததால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 192 ரன்களை எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. இதனால் ஆட்டத்தின் முடிவை எட்ட சூப்பர் ஓவர் முறை பின் பற்றது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
சூப்பர் ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இருப்பினும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.