கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய தியாகி - பாராட்டு மழை!
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் அடித்தது. இளம் வீரர் ஜெயிஸ்வால் 49 ரன்களும் லோம்ரோர் 17 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 43 ரன்களும் எவின் லூயிஸ் 36 ரன்களும் எடுத்தார்கள். அடுத்து ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களே அடித்தது. ராகுல் 49 ரன்களும் மயங்க் அகர்வால் 67 ரன்களும் எடுத்தார்கள்.
கடைசி இரு ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற 8 ரன்களே தேவைப்பட்டன. 8 விக்கெட்டுகள் மீதமிருந்தன. மார்க்ரமும் நிகோலஸ் பூரனும் நன்கு விளையாடிக் கொண்டிருந்ததால் 19ஆவது ஓவரிலேயே பஞ்சாப் அணி வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19ஆவது ஓவரை வீசிய முஸ்தபிசூர் ரஹ்மான் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற மற்றொரு எளிதான நிலைமையிலும் பஞ்சாப் அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் த்ரிலான வெற்றியை ராஜஸ்தான் அணி ருசித்தது. கடைசி ஓவரை அற்புதமாக வீசி 1 ரன் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த 20 வயது கார்த்திக் தியாகி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு நம்ப முடியாத வெற்றியைத் தேடித் தந்த கார்த்திக் தியாகி பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ட்விட்டரில் “என்ன ஒரு ஓவர் கார்த்திக் தியாகி. அப்படியொரு அழுத்தமான கட்டத்தில் பதற்றப்படாமல் நிதானமாக இருந்து பணியைச் சிறப்பாக முடித்துள்ளார். அற்புதம். மிகவும் ஈர்த்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மேலும் இந்திய அணி முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், வெங்கடேஷ் பிரசாத், அபினவ் முகுந்த் போன்ற பிரபலங்களும் சமூகவலைத்தளங்களில் கார்த்திக் தியாகிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.