சூப்பர் மேனாக மாறிய சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் பாராட்டு!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள்போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 97 ரன்களும், சுப்மன் கில் 64 ரன்களையும் விளாசினர். கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான வேகத்தில் இலக்கை நெருங்கியது. அகீல் ஹுசைன் மற்றும் ரோமாரியோ ஷெப்பெர்ட் ஆகியோர் கடைசி நேரத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் கடைசி ஓவரில் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
ஸ்ட்ரைக்கில் அதிரடி வீரர் ஷெப்பெர்ட் இருந்ததால் இந்திய அணி தோற்றுவிடுமோ என்ற பரபரப்பு நிலவியது. ஆனால் முகமது சிராஜ் வீசிய அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 10 ரன்கள் அடித்துவிட, கடைசி பந்தில் ஒரு பவுண்டரி அடித்தால் கூட போட்டி டிராவாகிவிடும் என்ற சூழல் இருந்தது. எனினும் அதில் ஒரே ஒரு ரன் மட்டுமே வந்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் தான் வெற்றிக்கு காரணம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடைசி ஓவரில் முதல் 2 பந்துகளை சரியாக வீசிய சிராஜ், 3ஆவது பந்தில் பவுண்டரியை கொடுத்தார். இதனால் பதற்றமடைந்த அவர் அடுத்த 2 பந்துகளை சரியான லைனில் வீசவில்லை. 4ஆவது பந்தில் 2 ரன்கள் செல்ல, 5ஆவது பந்து வைடாக சென்றது. ஆனால் அந்த பந்து தான் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியது.
சிராஜ் மிகவும் லெக் சைடில் வீசியதால், பந்த பெரிய வைடாக சென்றது. எனினும் இதனை முன்கூட்டியே கணித்த சஞ்சு சாம்சன் சூப்பர் மேன் டைவ் அடித்து அந்த பந்தை தடுத்தார். அவர் மட்டும் அதை தடுக்கவில்லை என்றால் நிச்சயமாக பந்து பவுண்டரிக்கு சென்றிருக்கும். பின்னர் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவை என மாறி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருக்கலாம். இதனால் சஞ்சு சாம்சனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.