பேட்டர்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம் - ஹர்திக் பாண்டியா!

Updated: Mon, Aug 07 2023 12:06 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று கயானாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் குவித்தார்.

பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 18.5 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக நிக்கோலஸ் பூரான் 67 ரன்களை குவித்தார்.

இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஹார்திக் பாண்டியா, “உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால் இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 160 முதல் 170 ரன்கள் வரை அடித்திருந்தால் நிச்சயம் வெற்றிக்கு போதுமான இலக்காக இருந்திருக்கும்.

நிக்கோலஸ் பூரான் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் களத்தில் இருக்கும் போது ஸ்பின்னர்களை பயன்படுத்துவதில் சவாலாக இருந்தது. அவர் விளையாடிய விதம் எங்களது வெற்றியை அவர்களது கைக்கு கொண்டு சென்றதாக நினைக்கிறேன். அதேபோன்று எங்களது அணியின் பேட்ஸ்மன்களும் நன்றாக விளையாட வேண்டியது அவசியம்.

ஸ்கோர் நன்றாக இருந்தால் பவுலர்கள் போட்டியை வெற்றி பெற்று கொடுப்பார்கள். ஆனால் இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. அணியில் நல்ல சமநிலையை கொண்டு வர வேண்டுமெனில் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை