WI vs IND 1st ODI: விண்டீஸை எளிதாக வீழ்த்தியது இந்தியா!

Updated: Thu, Jul 27 2023 23:14 IST
WI vs IND 1st ODI: விண்டீஸை எளிதாக வீழ்த்தியது இந்தியா! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. 

தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி முன்னணி பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியா வீசிய 3வது ஓவரிலேயே மேயர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அலிக் அதானாஸ் 22 ரன்களிலும், பிராண்டன் கிங் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 45 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அண்இ 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் கேப்டன் ஷாய் ஹோப் - ஷிம்ரான் ஹெட்மையர் கூட்டணி சிறிது நேரம் விக்கெட் கொடுக்காமல் விளையாடியது. சிறிய பார்ட்னர்ஷிப் உருவாகிய நிலையில், ஜடேஜா பந்தில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஹெட்மையர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பவல் 4 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவின் ஆரம்பமானது. இதன்பின் வந்த வீரர்கள் சீட்டு கட்டைப் போல் சரிந்தனர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஹோப் மட்டும் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கத்திற்கு மாறாக இஷான் கிஷன் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஷுப்மன் கில் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 19 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷன் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 7 பவுண்டரி ஒரு சிக்சர் என 52 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாக்கூரும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா - கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 22.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை