WI vs IND, 2nd ODI: ஹோப் சதம், பூரன் அரைசதம்; இந்தியாவுக்கு 312 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குயின்ஸ்பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் - கைல் மேயர்ஸ் அணி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அஸ்திவாரம் அமைத்தர். இதில் ஷாய் ஹோப் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 39 ரன்களில் கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷமாரா ப்ரூக்ஸும் தனது பங்கிற்கு 35 ரன்களைச் சேர்த்த நிலையில் அக்ஸர் பட்டேலிடம் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் - நிக்கோலஸ் பூரன் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது. ஒருகட்டத்தில் ஹோப் நிதானமாக விளையாட பூரன் அரைசதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் 74 ரன்கள் சேர்த்த நிலையில் ஷர்தூல் தாக்கூர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.
ஆனாலும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாய் ஹோப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 13ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். மேலும் இது அவர் விளையாடும் 100ஆவது சர்வதேச ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் 13 ரன்காளில் ரோவ்மன் பாவல் ஷர்துல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து 115 ரன்கள் எடுத்திருந்த ஷாய் ஹோப், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.