WI vs IND, 4th T20I: யஷஸ்வி, ஷுப்மன் காட்டடி; தொடரை சமன்செய்தது இந்தியா!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 4ஆவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ், பிரண்டன் கிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதில் அதிரடியாக தொடங்கிய மேயர்ஸ் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரண்டன் கிங் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனைதொடர்ந்து ஷாய் ஹோப் களமிறங்கினார். அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட்டானார். அதிரடி வீரர்களான நிக்கோலஸ் பூரன் மற்றும் கேப்டன் ரோவ்மேன் பவல் இருவரும் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஹெட்மையர், தனது அதிரடி ஆட்டத்தால், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 39 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தம். ஆரம்பம் முதலே இருவரும் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் அரைசதத்தையும், ஷுப்மன் கில் தனது இரண்டாவது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர்.
அதன்பின் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 77 ரன்களைச் சேர்த்திருந்த ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 84 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது. இதனால் நாளை நடைபெறும் கடைசி டி20 போட்டியில் வெற்றிபெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.