WI vs NZ, 1st ODI: ப்ரூக்ஸ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Thu, Aug 18 2022 09:31 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பார்போடாஸில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் நட்சத்திர தொடக்க வீரர் ஃபின் ஆலன் 25 ரன்களிலும், மார்ட்டின் கப்தில் 24 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுமையாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய டேவன் கான்வே 4, டாம் லேதம் 12, டெரில் மிட்செல் 20 என அடுத்து விக்கெட்டுகள் சரிய கேன் வில்லியம்சன்னும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் களமிறங்கிய மைக்கேல் பிரேஸ் - மிட்செல் சாண்டனர் இணை ஒராளவு பார்ட்னர்ஷிப் அமைந்தார். ஆனால் அவர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 45.2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களை மட்டுமே சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பிராண்டன் கிங் 26 ரன்களோடு நடையைக் கட்டினார். இதையடுத்து களமிறங்கிய ஷமாரா ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமாரா ப்ரூக்ஸ் அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷமாரா ப்ரூக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை