WI vs PAK : 302 ரன்களில் டிக்ளர் செய்த பாகிஸ்தான்; ஆரம்பத்திலேயே தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அபித் அலி, இம்ரான் பட், அஷார் அலி ஆகிய முன்னணி வீரர்கள் 3 பேரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம், பவாத் ஆலம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
பின்னர் பாபர் அசாம் 75 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து பவாத் ஆலமும் 76 ரன்னில் காயம் காரணமாக ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஃபஹீம் அஷ்ரஃப் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து நேற்று நடைபெற இருந்த இரண்டாம் நாள் ஆட்டம் , தொடர் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணி நேற்று நடைபெற்ற 3ஆம் நாள் ஆட்டத்தில் மீண்டும் முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது.
இதில் அதிரடியாக விளையாடிய ஃபாவத் ஆலம் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதில் அதிகபட்சமாக ஃபாவத் ஆலம் 124 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோஹ், ஜெய்டன் சீல்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து மூன்றாம் நாளில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கத்திலேயே பிராத்வெயிட், பாவல், ரோஸ்டன் சேஸ் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த பொன்னர் - அல்ஸாரி ஜோசப் இணை நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர மிடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், ஃபஹீம் அஷ்ரஃப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இதனால் 263 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.