WI vs SA, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று செயிண்ட் ஜர்ஜில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரேன் பொல்லார்ட் முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரீச ஹென்ட்ரிக்ஸ், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம் ஆகியோர் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்
இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குயின்டன் டி காக் தனது 7ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் அவரும் 72 ரன்களில் ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மெக்காய் 4 விக்கெட்டுகளையும், டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லூயிஸ் - லிண்டெல் சிம்மன்ஸ் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தது. ஆனாலும் அது அணிக்கு பலனளிக்கவில்லை.
ஏனெனில் அந்த அணியில் ஒருவர் கூட 30 ரன்களுக்கு மேல் சேர்க்காததால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி உறுதியானது. இருப்பினும் கடைசி ஓவரில் வெற்றி 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
20ஆவது ஓவரை ரபாடா வீச, அதனை ஃபாபியன் ஆலன் எதிர்கொண்டார். ஓவரின் முதல் பந்தை பவுண்டரி விளாசிய ஆலன், கடைசி பந்தில் சிக்சரை பறக்க விட்டார். ஆனாலும் இடைபட்ட பந்துகளில் சரியாக ரன் எடுக்காததால், 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பில் 166 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்முலம் தென் ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.