WI vs SA 1st Test, Day 2: சதமடித்து அசத்திய டி காக்; மீண்டும் தடுமாறும் விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் செயிண்ட் லூசியாவில் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வென் டர் டஸ்சன் 34 ரன்னுடனும், குயின்டன் டிகாக் 4 ரன்னுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
போட்டி தொடங்கிய சிறுதி நேரத்திலேயே வேன் டர் டஸ்சன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டி காக் சதமடித்து அணியை வலிமையன நிலைக்கு கொண்டு சென்றார். அதன்பின் 141 ரன்களில் டி காக் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 322 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவுசெய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 225 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிரேக் பிராத்வெயிட் 7 ரன்களிலும், கிரேன் பாவல் 14 ரன்களிலும் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் நோர்ட்ஜே பந்துவீச்சில் நடையைக் கைட்டினார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து 143 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.