அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் தான் - சுனில் காவஸ்கர்!

Updated: Thu, Sep 16 2021 20:57 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் வழங்கப்படவில்லை. 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற ரீதியில் ஜடேஜாவுக்கு மட்டும் கேப்டன் கோலி வாய்ப்பு வழங்கினார். டெஸ்ட் போட்டியில் உலகின் நம்பர் 2 பந்துவீச்சாளராக அஸ்வின் இருந்தும் அவருக்கு வாய்ப்பு வழங்காத கோலியின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தச் சூழலில் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் ஒருநாள், டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அஸ்வின், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் நடுவரிசையை பலப்படுத்த ப்ளேயிங் லெவனில் எப்போதும் அஸ்வின் இருக்குமாறு முயற்சி செய்யுங்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா எனச் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேசிய கவாஸ்கர் ''இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் அஸ்வினைத் தேர்வு செய்யவில்லை என்பது விவாதத்துக்குள்ளானது. அதைச் சரிகட்டவே தேர்வாளர்கள் ஆறுதல் பரிசாக, அனைவரின் வாயை அடைக்கும் விதத்தில் அஸ்வினை டி20 உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வு செய்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

இந்திய அணியில் 15 பேரில் ஒருவராக அஸ்வின் இடம்பெற்றது மகிழ்ச்சி என்றாலும் ப்ளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். பொறுத்திருந்து பார்க்கலாம். உலகக் கோப்பைக்கான அணியில் 15 பேரில் ஒருவராக அஸ்வினைத் தேர்வு செய்துள்ளார்கள். இதேபோன்றுதான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அஸ்வினை இந்திய அணிக்குத் தேர்வு செய்துவிட்டு ஒருபோட்டியில்கூட வாய்ப்பு அளிக்கவில்லை. 

அஸ்வின் மனம் வேதனைப்படக் கூடாது என்பதற்காக ஆறுதல் பரிசாக உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனக் கருதுகிறேன். இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இருப்பாரா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அஸ்வின் உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்டதைவிட தோனி இந்திய அணிக்கு வழிகாட்டியாகத் தேர்வானது மிகப்பெரிய செய்தி. இந்திய அணிக்குள் தோனி இருந்தாலே அது மிகப்பெரிய பலனைத் தரும்'' என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை