இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பதிலடி கொடுப்போம் - ராப் வால்டர்!
நேற்று உலகக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமைந்திருந்தது. காரணம் இந்த இரண்டு அணிகளும் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி எதிரணிகளை அனாயசமாக வீழ்த்தி வந்தன.
இப்படிப்பட்ட இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி எப்படி அமையும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல் போட்டி இந்தியாவின் பக்கம் ஒருதலைபட்சமாக முடிந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விராட் கோலி சதத்துடன் 326 ரன்கள் குவித்துபேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் அசத்தியது.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி வெறும் 83 ரன்களில் சுருண்டு 243 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும் கூட, தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
இதுகுறித்து பேசிய தென் ஆப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர், “ஆமாம் நேற்று நடந்தது ஒரு வேடிக்கையான போட்டி. நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிய பாடங்களை கற்றுக் கொண்டே இருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் ஆச்சரியப்படுவீர்கள். எனவே மீண்டும் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக நாங்கள் மோதினால் இந்திய அணியை வீழ்த்துவோம். எங்களுக்கு ஏற்கனவே கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இந்தியா ஒரு அசுரத்தனமான அணியாக இருக்கிறது. அவர்கள் மிகவும் சமநிலை கொண்ட மற்றும் திறமையான அணி.
அவர்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். மேலும் அதை மிக நன்றாக வென்று இருக்கிறார்கள். நாங்கள் இந்த போட்டி குறித்து என்ன செயல்படுத்த நினைத்தோமோ அதைச் செய்யவில்லை. மார்க்கோ ஜன்சன் புதிய பந்தில் என்ன செய்ய முடியும் என்று நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். ஆனால் நேற்று அவருடைய நாளாக அமையவில்லை. அவர் ஒரு இளைஞர். ஏழு போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். அடுத்த போட்டியில் அவர் மீண்டு வந்து சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார்.