ஓர் அணியாக எங்களின் திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் - கேன் வில்லியம்சன்!

Updated: Tue, Nov 14 2023 20:17 IST
ஓர் அணியாக எங்களின் திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் - கேன் வில்லியம்சன்! (Image Source: Google)

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை நடத்தும் இந்தியா நாளை அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவதால், கிரிக்கெட் களம் பரபரப்பானதாக மாறியிருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி 2019 ஆம் ஆண்டு இதே கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் உலகக்கோப்பை அரை இறுதியில் தோல்வி அடைந்திருக்கிறது.

இதன் காரணமாக இந்த போட்டிக்கு மேலும் எதிர்பார்ப்பும் சிறிது அச்ச உணர்வும் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்திய வீரர்கள் தரப்பில் அவர்கள் மிகுந்த நம்பிக்கை உடன் நேர்மறையான எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு போட்டி குறித்து பதில் அளித்து இருக்கிறார்.

அப்போது பேசிய அவர், “இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் சிறந்த அணி என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும். ஆனால், தொடரின் இறுதிக்கட்டத்தை எட்டும்போது எல்லாவற்றையும் முதலில் இருந்துதான் தொடங்கியாக வேண்டும். குறிப்பிட்ட அந்த நாளில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். 

நாங்கள் ஓர் அணியாக எங்களின் திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவமும் கவனமும் கொடுக்கப் போகிறோம். நாளைய சவாலுக்கு நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். 2019 உலகக்கோப்பையின் அரையிறுதியை விட இந்தப் போட்டி கொஞ்சம் வித்தியாசமானது என நினைக்கிறேன். வானிலையைப் பார்க்கையில் இந்தப் போட்டியை ஒரே நாளில் ஆடி முடித்துவிடுவோம் என நினைக்கிறேன்.

இரு அணிகளும் கடந்த சில வாரங்களாக சவாலான கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறோம். அதனால் இரு அணிகளுமே தங்களின் சிறந்த ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்த முயல்வோம். வான்கடே மைதானத்தில் கூடப்போகும் 33,000க்கும் அதிகமான ரசிகர்களும் இந்திய அணிக்குதான் ஆதரவு தெரிவிக்கப் போகிறார்கள். 

மைதானம் முழுவதும் நீல நிறத்தில்தான் காட்சியளிக்கப் போகிறது. கிரிக்கெட்டின் மீது அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட கூட்டத்தை நாளை பார்க்க முடியும். இந்த மாதிரியான கூட்டத்திற்கு முன்பாக ஆடுவதும் ஒரு வகையில் ஸ்பெஷல்தான். நாங்கள் பல காலமாக எங்களுக்கு ஆதரவளிக்காத பெரிய கூட்டத்தின் முன்பு விளையாடி பழக்கப்பட்டிருக்கிறோம். 

எங்களது நாடு சிறியது. குறைந்த மக்கள்தொகையைக் கொண்டது. ஒரு மைதானத்தை நிரப்பும் அளவுக்குக் கூட்டத்தை எங்களால் காட்ட முடியாது. ஆனாலும், இப்படி ஒரு சூழலில் மகிழ்ந்து அனுபவித்து ஆட விரும்புகிறேன். இந்தியாவில் இந்தியாவிற்கு எதிராக உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. இந்த வாய்ப்பை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை