மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகலுக்கு இடையேயான மகளிர் ஆஷ்ஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே டி20, டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.
அதன்படி இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி பெத் மூனியின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பெத் மூனி 73 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் கேத்ரின் பிரண்ட், கேட் கிராஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் வின்ஃபீல்ட் ஹில், டாமி பியூமண்ட், ஹிதர் நைட், எமி ஜோன்ஸ் என அனவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தன.
இருப்பினும் நடாலி ஸ்கைவர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கையளித்தார். ஆனால் அவரும் 45 ரன்களோடு வெளியேற இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது.
இதனால் 45 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி பிரவுன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 8-4 என்ற கணக்கில் மகளிர் ஆஷஸ் தொடரையும் தக்கவைத்தது.