மகளிர் ஆஷஸ்: இங்கிலாந்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மகளிர் ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது.
இதில் இன்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டாமி பியூமண்ட், நடாலி ஸ்கைவர் ஆகியோரைத் தவிர வேறு யாரும் சோபிக்காததால் 49.3 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டாமி பியூமண்ட் 50 ரன்களையும், நடாலி ஸ்கைவர் 46 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - ரேச்சல் ஹெய்னஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அலிசா ஹீலி 42 ரன்னிலும், ரேச்சல் ஹெய்னஸ் 31 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கேப்டம் மெக் லெனிங் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிபெறச் செய்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 12-4 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, மகளிர் ஆஷஸை தக்கவைத்துக்கொண்டுள்ளது.