மகளிர் உலகக்கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது விண்டீஸ்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இன்று முதல் நியூசிலாந்தில் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களைச் சேர்த்தது.
வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் தொடக்க வீராங்கனை ஹேலே மாத்யூஸ் அபாரமாக விளையாடி அவர் 119 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் லியா தஹுஹு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி சூஸி பேட்ஸ், அமிலிய கெர், சதர்வைட், லியா தஹுஹு, மேடி கிரீன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சோஃபி டிவைன் சதமடித்து தனி ஒருவராக அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.
அதன்பின் 108 ரன்கள் எடுத்திருந்த சோஃபி டிவைன், சினெல்லே ஹென்றி பந்துவிச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் கெட்டி மார்ட்டின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதனால் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 6 ரன்கள் தேவைப்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கடைசி ஓவரை வீசிய டெண்ட்ரா டோட்டின், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸுக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதனால் 49.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 256 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் 4 பந்துகளை மட்டுமே வீசிய டெண்ட்ரா டோட்டின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு உதவினார்.