மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Sat, Feb 18 2023 10:59 IST
Image Source: Google

மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

இதில் எமி ஹண்டர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேபி லூயிஸ் - ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் லூயிஸ் 38 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ப்ரெண்டர்காஸ்ட் அரைசதம் கடந்தார். பின் 61 ரன்களில் அவரும் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமிலியா கொன்னால் 3 விக்கெட்டுகளையும், அஃபி ஃபிளெட்சர், ராம்ஹராக் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய விண்டீஸ் அணியில் ரஷாதா வில்லியம்ஸ் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த காம்பெலும் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீராங்கனை கேப்டன் ஹீலி மேத்யூஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் 66 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

அவருக்கு துணையாக ஹென்றி 34 ரன்களைச் சேர்த்து உதவினார். இதன்மூலம் 19.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை