WPL 2024: யுபி வாரியர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது ஆர்சிபி!

Updated: Mon, Mar 04 2024 22:54 IST
WPL 2024: யுபி வாரியர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது ஆர்சிபி! (Image Source: Google)

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி பலபப்ரீட்சை நடத்துகிறது. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு வழக்கத்திற்கு மாறாக கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் சபினேனி மேகனா தொடக்கம் கொடுத்தார். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அடித்தளத்தை அமைத்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மேகனா 28 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த ஸ்மிருதி மந்தனா 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின்னர் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட ஸ்மிருதி மந்தனா மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சதமடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்களில் ஆட்டமிழந்து ஸ்மிருதி மந்தனா சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

ஆனால் அவர் விட்டுச்சென்ற அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த எல்லிஸ் பெர்ரி 33 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின்னும் அதிரடியாக விளையாடி வந்த எல்லிஸ் பெர்ரி 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 58 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த ரிச்சா கோஷ் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய யுபி வாரியர்ஸ் அணிக்கு கிரண் நவ்கிரே - அலிசா ஹீலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய கிரண் நவ்கிரே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 18 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சமாரி அத்தபத்து 8 ரன்களிலும், கிரேஸ் ஹாரிஸ் 5 ரன்களிலும், ஸ்வேதா ஷ்ரேவாத் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் அலிசா ஹீலி அரைசதம் கடந்த நிலையில், 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய தீப்தி சர்மா - பூனம் கெம்னர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தடுத்து, இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். அதன்பின் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 33 ரன்களில் தீப்தி சர்மா தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய சோஃபி எக்லெஸ்டோனும் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை போராடிய பூனம் கெம்னர் 4 பவுண்டரி ஒரு சிக்சர் என 31 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் சோஃபி டிவைன், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஆஷா சோபனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி மகளிர் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை