WPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய அமெலியா கெர்; குஜராத்தை பந்தாடியது மும்பை!

Updated: Sun, Feb 25 2024 22:47 IST
WPL 2024: ஆல் ரவுண்டராக அசத்திய அமெலியா கெர்; குஜராத்தை பந்தாடியது மும்பை! (Image Source: Google)

இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் - குஜராத் ஜெயண்ட்ஸும் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவு முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.  அணியின் தோடக்க வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் 7 ரன்களுக்கும், தயாளன் ஹேமலதா 3 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.  அதேசமயம் அணியின் நம்பிக்கையாக இருந்த கேப்டன் பெத் மூனி 24 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஆஷ்லே கார்ட்னர் 15 ரன்களிலும், ஸ்நே ராணா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து அமெலிய கெர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.  இதையடுத்து கேத்ரின் பிரைஸுடன் தனுஜா கன்வெர் இணை ஜோடி சேர்ந்து விளையாடினார்.  இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியை சவாலான இலக்கை நோக்கி அழைத்துச்சென்றார்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களைச் சேர்த்திருந்த தனுஜா கன்வெர் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கேத்ரின் பிரைஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 25 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அமெலியா கெர் 4 விக்கெட்டுகளையும், ஷப்னம் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் யஷ்திகா பாட்டியா மற்றும் ஹீலி மேத்யூஸ் ஆகியோர் தலா 7 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டுகளை பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர் பிரையண்ட் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவு இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் நாட் ஸ்கைவர் 22 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனைத்தொடர்ந்து ஹர்மன்ப்ரீத் கவுருடன் இணைந்த அமெலியா கெரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடி நான்காவது விக்கெட்டிற்கு 64 ரன்களைச் சேர்த்ததுடன் அணியின் வெற்றியையும் ஏறத்தாழ உறுதிசெய்தனர். பின்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அமெலிய கெர் மூன்று பவுண்டரிகளுடன் 31 ரன்களைச் சேர்த்த விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பூஜா வஸ்திரேகரும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்ததுடன், 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 46 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியளில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை