WPL 2025: ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரி அதிரடியில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!

Updated: Fri, Feb 14 2025 23:10 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி மற்றும் லாரா வோல்வார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி அதிரடியாக விளையாடிய நிலையில் மறுமுனையில் லாரா வோல்வார்ட் 6 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதாவும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த் பெத் மூனி - கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பெத் மூனி அரைசதம் கடந்தார். 

அதன்பின் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களைச் சேர்த்த நிலையில் பெத் மூனி ஆட்டமிழந்தார். அதன்பின் ஆஷ்லே கார்ட்னருடன் இணைந்த டியாண்டிரா டோட்டினும் அதிரடியாக விளையாட ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஆஷ்லே கார்ட்னர் அரைசதம் கடந்தார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டியாண்டிரா டோட்டின் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 25 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சிம்ரன் ஷேக்கும் 11 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 3 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 79 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைக் குவித்தது. ஆர்சிபி அணி தரப்பில் ரேனுகா சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்மிருதி மந்தனா 9 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டேனியல் வையட்டும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி மற்றும் ரக்வி பிஸ்ட் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரக்வி பிஸ்ட் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 57 ரன்கள் சேர்த்த நிலையில் எல்லிஸ் பெர்ரியும் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் மற்றும் கனிகா அஹுஜா இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர். அதிலும் குறிப்பாக பவுண்டரி மழை பொழிந்த ரிச்சா கோஷ் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டாமிழக்காமல் இருந்த ரிச்சா கோஷ் 27 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் அதில் 7 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் விளாசியதுடன் 64 ரன்களையும், கனிகா 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு மகளிர் பிரீமியர் லீக் தொடரையும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை