ஐபிஎல் 2023: மே 28இல் முடிக்க பிசிசிஐ திட்டம்!
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதனையடுத்து டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் தொடர் குறித்த விவாதங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் ஐபிஎல் தொடரின் ஏலம் முடிவடைந்ததை அடுத்து போட்டிகளின் அட்டவணைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி ஐபிஎல் தொடரானது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் மார்ச் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்திய வீரர்களுக்கு ஒரு வாரம் ஓய்வு கொடுத்துவிட்டு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஐபிஎல்-ஐ தொடங்குகின்றனர். இதே போல மே 28ஆம் தேதியன்று இறுதி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரின் போட்டிகளை அதிகரித்திருப்பதால் இந்த முறை 74 நாட்களுக்கு நடத்துவதற்கு தான் முதலில் ஆலோசித்தனர். ரசிகர்களும் உற்சாகத்துடன் இருந்தனர். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 8ஆம் தேதியன்று தொடங்கவுள்ளதால் அதற்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே 58 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அட்டவணை பிப்ரவரி முதல் வாரத்தில் வரலாம்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 136 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்துவிட்டது. 99 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ள இந்திய அணி , பார்டர் கவாஸ்கர் தொடரில் வெற்றி கண்டால் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ஒருவேளை இரு அணிகளும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிட்டால், ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுகளில் இரு அணிகளின் முன்னணி வீரர்கள் யாரும் விளையாட மாட்டார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் பாதியிலேயே சொந்த நாட்டிற்கு திரும்ப வாய்ப்புள்ளது.