வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றப்படும் சவுத்தாம்ப்டன் மைதானம்!
இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது.
இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு அணிகள் இப்போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் மைதானம் வேகம் மற்றும் பவுன்சுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதாக மைதான ஊழியர் சிமன் லீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சிமன் லீ, “தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை, மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதை தான் விரும்புவேன். அதனையே தற்போது சவுத்தாம்ப்டன் மைதானத்திலும் செய்துவருகிறோம். ஆனால் இங்கிலாந்தின் தட்பவெப்ப நிலை எங்களுக்கு பெரும்பாலும் உதவாது என்பதால், இதனை செய்வது மிக கடினமாக இருக்கலாம்.
ஆனாலும் நாங்கள் எங்களது பணியை தொடங்கிய போது எங்களுக்கு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது மைதானத்தில் நாங்கள் மேற்கொண்டு வரும் பணியால் முன்பை விட தற்போது சற்று கூடுதல் வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இங்கிலாந்து சூழ்நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என கருத்துகள் நிலவும் நிலையில், தற்போது மைதானமும் வேகப்பந்து வீச்சுக்கு சதகமாக மாற்றப்படுவது இந்திய அணிக்கு சற்று நெருக்கடியை உருவாக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.