டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். டெஸ்ட் போட்டிகளில் அணிகள் பெறும் வெற்றிகளின் சதவிகிதங்கள் அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் வரிசைப்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில், அதிக வெற்றிகளை பெறும் அணிகளால் தான், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். கடந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்தியாவும் நியூசிலாந்தும் இம்முறை பின் தங்கியுள்ளன. இம்முறை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 71.43 சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பின் 75 சதவிகிதத்துடன் முதலிடத்தை வலுவாக பிடித்துள்ளது.
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் அபாரமாக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் 75 சதவிகித வெற்றியுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 70 சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் உள்ளது.
இப்பட்டியளில் இலங்கை அணி 3ஆம் இடத்திலும், இந்திய அணி 4ஆம் இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி 5ஆம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 31.37 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 7ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.