அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்: வரலாறு நிகழ்த்திய சாம் கரண், காமரூன் க்ரீன்; சிஎஸ்கேவில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்!

Updated: Fri, Dec 23 2022 15:57 IST
Young Guns Sam Curran and Cameron Green have broken all previous IPL records! (Image Source: Google)

ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் ஆல் ரவுண்டர்களுக்கான ஏலத்தில், நம்பர் 1 ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசனை ஒரு அணி கூட ஏலத்தில் எடுக்காத நிலையில், சுட்டி குழந்தை சாம் கர்ரானிற்காக அனைத்து அணிகளும் மல்லுக்கட்டின.வெறும் 2 கோடி ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த சாம் கரனிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், பஞ்சாப் அணி என பல அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டியதால் அவரது விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

கைவசம் வெறும் 19 கோடி ரூபாயை வைத்திருக்கும் சென்னை அணி எதோ ஒரு தைரியத்தில் சாம் கரனிற்காக கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் வரை கொடுக்க முன்வந்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் விடாப்பிடியாக மல்லுக்கட்டியதால் இறுதியாக சாம் கர்ரானை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் பட்டியலில் சாம் கர்ரான் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் தென் ஆப்ரிக்கா அணியின் கிரிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்ததே முதல் இடத்தில் இருந்தது, தற்போது இதனை சாம் கர்ரான் முறியடித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனிற்கு டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 17.50 கோடி ரூபாய்க்கு கேமரூன் கிரினை வாங்கியது. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸிற்கான ஏலம் வந்தது. இதில் முதலில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டிபோட்ட நிலையில்,இறுதியில் அது லக்னோ மற்றும் சிஎஸ்கேவிற்கான போட்டியாக மாறியது. இதில் சிஎஸ்கே அணி 16.25 கோடி ரூபாய்க்கு பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் எனும் பெருமையை கிறிஸ் மோரிஸுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை