ஸ்டூவர்ட் பிராடிற்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர், இந்த முறை இங்கிலாந்தில் நடந்து வருகிறது. சில எதிர்பார்ப்புகளோடு ஆரம்பித்து, சில எதிர்பாராத நிகழ்வுகளோடு முடிய இருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் நகர்ந்து கொள்ள, புதிய கேப்டனாக பெண் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் இருவரும் கொண்டுவரப்பட்ட பிறகு, அந்த அணியின் மொத்த வீரர்களும் சேர்ந்து பேட்டிங், பவுலிங், பீல்டிங் என முழுக்க முழுக்க தாக்குதல் பாணியில் விளையாட ஆரம்பித்தார்கள்.
இதன் காரணமாக வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் புதுவிதமான தாக்குதல் பாணி ஆட்டம் வீரியமிக்கதாக இருக்குமா? இல்லை தோல்வியடையுமா? என்று உலகின் பலநாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் அதற்கான விடையும் கிடைத்திருக்கிறது. அதே சமயத்தில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில், 37 வயதான இங்கிலாந்து டெஸ்ட் அணியின் சாம்பியன் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆசஸ் தொடரின் இந்தக்கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணியில் தமது சக சாம்பியன் வேகப்பந்துவீச்சாளரான 41 வயது ஜேம்ஸ் ஆண்டர்சன் உடன் இணைந்து 1037 சர்வதேச டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி, யாராலும் முறியடிப்பதற்கு மிகக்கடினமான உலகச் சாதனையைப் படைத்து விடைபெற இருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணியின் சாம்பியன் வீரரான முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இதயம் நெகிழும்படியான தனது வாழ்த்தை ஸ்டூவர்ட் பிராடுக்கு வழங்கி இருக்கிறார். கிரிக்கெட் வட்டாரத்தில் யுவராஜ் சிங்கின் பிராடுடுக்கான வாழ்த்து எவ்வளவு முக்கியமானது? என்று தெரியும்.
காரணம், 2007ஆம் ஆண்டு முதல் முதலாக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையில், ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில், ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு யுவராஜ் சிங் யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிரடியை வெளிப்படுத்தி சாதனை செய்திருந்தார். இளம் வயதில் ஸ்டூவர்ட் பிராடின் பந்துவீச்சில் விழுந்த அந்த அடி, அவருக்கு பின் நாட்களில் பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கக் கூடியதாக அமைந்திருந்தது.
ஸ்டூவர்ட் பிராடுக்கான தனது வாழ்த்தில் யுவராஜ் சிங் ” தலை வணங்குகிறேன்! நம்ப முடியாத டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள். சிறந்த மற்றும் பேட்மேன்கள் அச்சப்படும் சிவப்புப்பந்து பந்துவீச்சாளர்களில் நீங்கள் ஒருவர். மேலும் நீங்கள் ஒரு உண்மையான ஜாம்பவான். உங்களுடைய பயணமும் உங்களுடைய மன உறுதியும் மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய ஒன்று. உங்களுடைய அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.