புற்றுநோய் சிகிச்சைக்கான தகவல்களை வழங்கும் செயலியின் தூதராக யுவராஜ் சிங்!
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உலகக் கோப்பை வென்ற அணியில் பிரதான பங்களிப்பை அளித்தவர். 40 டெஸ்ட், 304 ஒருநாள் மற்றும் 58 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 11,778 ரன்கள் எடுத்துள்ளார்.
2011 வாக்கில் உலகக் கோப்பை வென்ற நிலையில் அவருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. 2012 இல் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து புற்றுநோயில் இருந்து குணமடைந்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
ஆனால் அதன்பின் அவரால் சரிவர செயல்பட முடியாததால் கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இப்போது புற்றுநோய் சிகிச்சைக்கான தகவல்களை வழங்கும் கியூரியா என்ற செயலி உடன் இணைந்துள்ளார். இந்த செயலியை சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஓன்கோகாயின் (OncoCoin) என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சைக்கான முறையான தகவல்கள் குறித்த விவரம் மற்றும் அந்த நோய் சார்ந்த ஆராய்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளில் இந்த செயலி இயங்கி வருகிறது. இந்தியாவில் இந்த செயலி இயக்கம் குறித்த விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்கான தகவல்களை வழங்கும் கியூரியா (Curia) செயலியின் பிராண்ட் அம்பாசிட்டராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இணைந்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,"நான் கியூரியாவுடன் கைகோர்த்துள்ளேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. புற்றுநோயாளிகளுக்கு தேவைப்படும் சிகிச்சைக்கான சரியான தகவல்களை வழங்கும் செயலி இது. நானே புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவன் என்ற அடிப்படையில் பல நோயாளிகளுக்கு இந்த செயலி உதவுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.