சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் கிறிஸ் கெயில் 9 ரன்களிலும், லிண்டல் சிம்மன்ஸ் 2 ரன்னிலும், வால்டன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய டுவைன் ஸ்மித், பெர்கின்ஸ் மற்றும் டுவைன் பிராவோ உள்ளிட்டோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 43 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கீரன் பொல்லார்ட் ஒருமுனையில் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா சாம்பியன்ஸ் அணியில் ராபின் உத்தப்பா 8 ரன்களுக்கும், ஷிகர் தவான் 25 ரன்களுக்கும், குர்கீரத் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 7 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டூவர்ட் பின்னி மற்றும் கேப்டன் யுவராஜ் சிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இதில் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், யுவராஜ் சிங் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஸ்டூவர்ட் பின்னி அரைசதம் கடந்த அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 50 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய யூசுஃப் பதான் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் இந்தியா சாம்பியன்ஸ் அணி 13.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா சாம்பியன்ஸ் அணி நடப்பு உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. இதையடுத்து அரையிறுதி போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணி பாகிஸ்தான் சாம்பியன்ஸை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score
Advertisement


 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News