ZIM vs BAN, 1st ODI: ஜிம்பாப்வேவை சுருட்டிய ஷாகிப்; வங்கதேசம் அபார வெற்றி!
ஜிம்பாப்வே - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி லிட்டன் தாசின் அபாரமான சதத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் ழிஅப்பிற்கு 276 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 102 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்பே அணி வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினர்.
அதிலும் குறிப்பாக கேப்டன் டெய்லர், டியன் மையர்ஸ், சகப்வா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதில் வங்கதேச அணியில் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம் முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும் சிறப்பாக விளையாடி சதமடித்த லிட்டன் தாஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.