ஜிம்பாப்வே - வங்கதேச அணிக்ளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து விளையாடியது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெஸ்லி மாதேவெர் 56 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச 75 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாகிப் அல் ஹசன் அரைசதம் கடந்த நம்பிக்கையளித்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஷாகிப் அல் ஹசன், இறுதிவரை விடா முயற்சியோடு போராடி கடைசி ஓவரில் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் 49.1 ஓவர்களில் வங்கதேச அணி இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. வங்கதேச அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாகிப் அல் ஹசன் 96 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.