வங்கதேச அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்கதேச அணியின் தொடக்க வீரர் சைஃப் ஹசன் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஷத்மான் இஸ்லாம் 23 ரன்கள் மட்டுமே அடித்தார்.
அதன்பின் களமிறங்கிய முஷ்ஃபிகுர் ரஹீம்(11), ஷகிப் அல் ஹசன்(3) ஆகியோர் ஏமாற்றமளிக்க, சிறப்பாக ஆடிய கேப்டன் மோமினுல் ஹக் 70 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் லிட்டன் தாஸ் சிறப்பாக ஆடி 95 ரன்கள் அடித்து 5 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களத்திற்கு வந்த மஹ்மதுல்லாவுடன் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டஸ்கின் அகமது மிகச்சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். சிறப்பாக ஆடிய மஹ்மதுல்லா சதமடிக்க, அவருடன் இனைந்து சிறப்பாக ஆடிய டஸ்கின் அகமது அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 191 ரன்களை குவித்தனர். டஸ்கின் அகமது 75 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டும் உடனே விழுந்தது.
இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 468 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மிகச்சிறப்பாக விளையாடிய மஹ்முதுல்லா 150 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதன்பின் இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு மில்டன் ஷும்பா -டாகுட்ஸ்வானாஷே கைடானோ இணை தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதல் மில்டன் ஷும்பா 41 ரன்களில் எடுத்திருந்த நிலையில் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மில்டன் ஷும்பா - பிராண்டன் டெய்லர் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது.
இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி ஓரு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியில் கைடானோ 33 ரன்களுடனும், பிராண்டன் டெய்லர் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து 354 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜிம்பாப்வே அணி தொடரவுள்ளது.