ZIM vs BAN, Only test: கைடானோ, டெய்லர் அதிரடியில் ஃபாலோ ஆனை தவிர்த்த ஜிம்பாப்வே!
வங்கதேச அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி ஹராரேவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி மஹ்மதுல்லா, டஸ்கின் அஹ்மது ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 468 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் அதிகபட்சமாக மிகச்சிறப்பாக விளையாடிய மஹ்முதுல்லா 150 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே அணி தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இரண்டாம் நாளின் 3ஆவது செஷனில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி ஆட்டநேர முடிவில் ஓரு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களைச் சேர்த்தது.
பின் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் 354 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை ஜிம்பாப்வே அணி தொடர்ந்தது. இதில் கைடானோ 33 ரன்களுடனும், பிராண்டன் டெய்லர் 37 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் இருவரும் சதமடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிராண்டன் டெய்லர் 81 ரன்னிலும், கைடானோ 87 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 276 ரன்களில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஃபாலோ ஆனை தவிர்த்தது.. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன் பின்னர் 192 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 45 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் சாதம் இஸ்லாம் 22 ரன்களுடனும், சாய்ஃப் ஹசன் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதன் மூலம் வங்கதேச அணி 237 ரன்கள் முன்னிலையுடன் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.