இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டெய்லர்!
Sri Lanka Tour Of Zimbabwe: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியின் அனுபவ வீரர் பிராண்டன் டெய்லர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இலங்கை அணியானது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.இந்நிலையில் மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்றும், இந்த டி20 தொடரை ஜிம்பாப்வே டி20 உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்றுக்கான தயாரிப்பாக எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
இத்தொடருக்கான இலங்கை அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் வநிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை. இந்நிலையில் இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2021 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்த, ஜிம்பாப்வேவின் பிரண்டன் டெய்லர் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், இதுவரை 205 போட்டிகளில் விளையாடி 35.55 சராசரியுடன் 6684 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்ச 145 ரன்களுடன் 11 சதங்கள் விளாசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த அணியின் கேப்டனாக கிரெய்க் எர்வின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பென் கரண், சிக்கந்தர் ரஸா, பிரையன் பென்னட் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வே ஒருநாள் அணி: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், பென் குர்ரன், பிராட் எவன்ஸ், ட்ரெவர் குவாண்டு, வெஸ்லி மாதேவெரே, கிளைவ் மாடண்டே, எர்னஸ்ட் மசுகு, டோனி முனியோங்கா, பிளஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் ங்கரவா, நியூமன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராசா, பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ்.
இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிஷங்க, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, துனித் வெல்லலகே, மிலன் ரத்நாயக்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க
Also Read: LIVE Cricket Score
ஜிம்பாப்வே - இலங்கை தொடர் அட்டவணை
- ஆகஸ்ட் 29 - முதல் ஒருநாள் போட்டி
- ஆகஸ்ட் 31 - இரண்டாவது ஒருநாள் போட்டி
- செப்டம்பர் 3 - முதல் டி20 போட்டி
- செப்டம்பர் 6 - இரண்டாவது டி20 போட்டி
- செப்டம்பர் 7 - மூன்றாவது டி20 போட்டி