தமிம் இக்பால் அதிரடியில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 298 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்ச ரேஜிஸ் சகாப்வா 84 ரன்களையும், சிகந்தர் ரஸா 57, ரியான் பர்ல் 59 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் முஸ்தபிசூர், சைஃபுதின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 14ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தமிம் இக்பால் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய நுர்ல் ஹசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்ததார்.
இதனால் 48 ஓவர்களில் வங்கதேச அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது.
இப்போட்டியில் சதமடித்து அசத்திய தமிம் இக்பால் ஆட்டநாயகனாகவும், ஷாகிப் அல் ஹசன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.