CWC 2023 Qualifiers: வில்லியம்ஸ் காட்டடி; முதல் முறையாக 400 ரன்களை கடந்தது ஜிம்பாப்வே!

Updated: Mon, Jun 26 2023 16:13 IST
Image Source: Google

இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஐசிசி்யின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கும் ஜெரால்ட் கும்பி - இன்னசெண்ட் கையா இணை தொடக்கம் கொடுத்தனர்.  இதில் கையா 32 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் கும்பியுடன் இணைந்த கேப்டன் சீன் வில்லியம்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 78 ரன்களில் கும்பி விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன் வில்லியம்ஸ் சதமடித்து அசத்தினார்.  இதற்கிடையில் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ரஸா 48 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரியான் பார்ல் அதிரடியாக விளையாடி வெறும் 16 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகளை விளாசி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த சீன் வில்லியம்ஸ் 101 பந்துகளில் 21 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். 

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 400 ரன்களை கடந்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை