பிசிசிஐயின் இரட்டை அணி யுக்தி: வரலாறும், பின்னணியும்!

Updated: Fri, May 21 2021 19:37 IST
BCCI's Dual Team Tactics: History and Background! (Image Source: Google)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

மேலும் அப்போட்டி முடிந்தவுடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திலேயே தங்கி, ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இந்நிலையில் தான் பிசிசிஐ தலைவர் ரசிகர்களுக்கு மற்றுமொரு இன்பச் செய்தியை அறிவித்தார். அது, இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என்பதுதான். ஆனால் இதில் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்றையும் கங்குலி வைத்திருந்தார். 

ஆம்... இலங்கை சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி என நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத புது அணியை அனுப்பவுள்ளது தான் அந்த ட்விஸ்ட். அதன்படி இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களுடன் இஷான் கிஷான், பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்களை கொண்ட இந்த அணி உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் 2 இந்திய அணி 2 தொடர்களில் விளையாடவுள்ளது.

இதன் காரணமாக ஒரே நேரத்தில் இந்திய அணி இரண்டு சுற்றுப் பயணங்களில் கலந்துகொண்டு விளையாட இருக்கிறது. இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள், நிபுணர்கள் என அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் முன்னதாக இந்த இரு அணி கொள்கையை 1990 களில் ஆஸ்திரேலிய அணி செயல்படுத்த முயற்சித்தது. ஆனால் அதில் அவருக்கு போதிய செயல்பாடுகள் கிடைக்காததால், அம்முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கைவிட்டது. அதன்பின் வேறு எந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இதனை செய்ய முன்வரவில்லை. ஆனால் அதனை தற்போது பிசிசிஐ செய்து காட்டவுள்ளது. 

இந்நிலையில் தற்போது இந்திய அணி இது போன்று இரண்டு அணிகளுடன் ஒரே சமயத்தில் விளையாடுவது இது முதல் முறை அல்ல என்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே இந்திய அணி ஒரு முறை இரண்டு அணிகளோடு விளையாடியுள்ள இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி 1998 ஆம் ஆண்டு காமன்வெல்த் தொடருக்காக இந்திய அணி விளையாட சென்றிருந்த ஆதே வேளையில், பாகிஸ்தான் அணியுடனான ஷார்ஜா கோப்பை தொடரும் நடைபெற்றது. இதனால் அப்போதிருந்த பிசிசிஐ காமன்வெல்த் தொடருக்கு ஒரு அணியையும், ஷார்ஜா கோப்பை தொடருக்கு மற்றொரு அணி என இரண்டு இந்திய அணிகளையும் விளையாட அனுப்பியது. 

அதன்படி அஜய் ஜடேஜா தலைமையில் சச்சின், அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்டோர் அடங்கிய அணி காமன்வெல்த் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. 

அதே சமயத்தில் முகமது அசாருதீன் தலைமையில் கங்குலி, டிராவிட், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் என மற்றொரு இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஷார்ஜா கோப்பைத் தொடரில் கலந்துகொண்டு விளையாடினார். 

இதில் காமன்வெல்த் தொடரை இந்திய அணி இழந்தாலும், ஷார்ஜா கோப்பை தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியிருந்தது நினைவுக்கூறத்தக்கது.

தற்போது இதே யுக்தியை பயன்படுத்தி தான் ஒரே சமயத்தில் இரு சர்வதேச தொடர்களில் இந்தியா பங்கேற்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை