பிசிசிஐயின் புதிய அணி கொள்கை: இந்திய அணியில் சிக்கலை உண்டாக்குமா?
இந்திய அணி வருகிற ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ தலைவர் நேற்று அறிவித்தார்.
இது சமூக வலைதளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியது. ஏனெனில் 20 பேர் கோண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், எவ்வாறு அவர்களால் இலங்கை தொடரில் பங்கேற்க முடியும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நேற்று இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முற்றிலும் மாறுபட்ட புதிய இந்திய அணியை களம் இறக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளை பின்பற்றி டெஸ்ட் மற்றும் குறுகிய ஓவர்களுக்கு என இரண்டு அணிகளை பிசிசிஐ உருவாக்குகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முன்பெல்லாம் ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து போன்ற அணிகளுடன் நடைபெறும் சுற்றுப்பயணங்களுக்கு இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இந்தியா ஏ அணியை சேர்ந்த விரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
ஆனால் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து தொடர் என சீனியர் வீரர்கள் பிஸியாக இருப்பதால், இம்முடிவை பிசிசிஐ எடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும் அப்படியே புதிய அணியை இலங்கை தொடருக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்தால், பிரித்வி ஷா, படிக்கல், இஷான் கிஷான், சூர்யகுமார் போன்ற இளம் வீரர்களும், இங்கிலாந்து தொடரில் இடம்பெறாமல் இருக்கும் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஷிகர் தவான் போன்ற அனுபவ வீரர்களை கொண்ட அணியையே அனுப்பும் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சேர்க்க படாமல் இருந்திருக்கலாம் என்றும் விமர்சனங்கள் பரவி வருகிறது.
ஏற்கெனவே இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி - ரோஹித் சர்மா ஆகியோரிடையே கேப்டன்சியில் தல்லு முல்லு நிலவும் நிலையில் பிசிசிஐ-யின் இந்த புதிய அணி கொள்கை மேலும் அணி வீரர்களிடையே பிரச்சனையை உண்டாக்கும் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன.
ஒருவேளை இலங்கை தொடருக்காக புதிய அணியை பிசிசிஐ அறிவித்தாலும், அந்த அணியை யார் வழிநடத்துவார் என்ற சிக்கலும் உள்ளது. ஏனெனில் தவான், புவனேஷ்வர், ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்களுக்கு கேப்டன் பதவி வழங்கப்படுமா? அல்லது பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் கேப்டனாக படுவார்களா என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இப்பிரச்சனைகள் பிசிசிஐ எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் முடிவுக்கு வரும் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை இலங்கை தொடருக்கு புதிய அணியை பிசிசிஐ அனுப்ப முடிவு செய்தால், இத்தொடருக்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் விவரம்
பிரித்வி ஷா, ஷிகர் தவான், தேவ்தத் படிக்கல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே, ருதுராஜ் கெய்க்வாட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ராகுல் திவேத்தியா, ஷிவம் தூபே, விஜய் சங்கர், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், நவ்தீப் சைனி, ஹர்சல் படேல், கலீல் அஹ்மத், ஜெய்தேவ் உனாட்கட், சேதன் சக்காரியா, வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ராகுல் சஹார்.