சாஹர் vs சாஹல் ஒப்பீடு நியாயப்படுத்தப்பட்டதா?
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.
இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இம்மாதம் அறிவிக்கப்பட்டது.
இதில் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் அணியிலிருந்து நீக்கப்பட்டு, இளம் வீரரான ராகுல் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டார். இது பெரும் விமர்சனங்களுக்குள்ளான நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் யுஸ்வேந்திர சஹால் சிறப்பாக செயல்பட்டு வருவதையடுத்து, டி20 உலகக்கோப்பை அணி தேர்வு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் யுஸ்வேந்திர சஹால் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதமும் வலுக்கத்தொடங்கியுள்ளது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனின் முதல் பாதியில் ராகுல் சாஹர் 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ஆனால் அதேசமயம் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளை மட்டுமே பெற்றிருந்தார். அதன்பின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது சஹாலை விட ராகுல் சாஹரின் ஆட்டம் அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஹாலுக்கு பதிலாக ராகுல் சாஹர் முதல் தேர்வாக அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் தேர்வாளர்களின் எண்ணத்தை மாற்றும் வகையில் சஹால் தனது திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அதன்படி இரண்டாம் பாதி தொடரின் 4 போட்டிகளில் விளையாடிய சஹால் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்த, ராகுல் சாஹரோ 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தேர்வில் தேர்வாளர்கள் கோட்டைவிட்டுள்ளனரோ என்ற கேள்வியும், அதேசமயம் அணி தேர்வில் ஏதும் மாற்றம் நிகழுமோ என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.