இந்திய அணியின் ‘மிஸ்டர் டிபென்டபுள் வெர்ஷன் 2.0’ #HappyBirthdayAjinkyaRahane
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் அஜிங்கியா ரஹானே. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமது நகர் மாவட்டத்தில் 1988ஆம் ஆண்டு பிறந்தார். அவரது அப்பா ஒரு போக்குவரத்து தொழிலாளியாக இருந்தார். ரஹானே தனது 7 வயதில் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தனக்கு அப்போது கிரிக்கெட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றும், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவே இந்த கிளப்பில் தனது பெற்றோர் சேர்த்ததாகவும் ஒரு பேட்டியின் போது அவரே ரஹானே கூறியுள்ளார்.
உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்தாலும், பின்னாளில் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுக்க, இந்த பயிற்சி மையம் உதவியது. கிரிக்கெட்டுடன் கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட ரஹானே அதில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த ரஹானே ,தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்டோருக் கான அணி, இந்திய அணி என்று அவரது பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ரஹானேவை ஒரு பொறுமையான டெஸ்ட் பேட்ஸ்மேன் தான் பலருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மைதானத்தில் அதிரடி காட்ட அவர் தவறியதில்லை. டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமை ரஹானேவுக்கு உண்டு. 2012 ஆம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்திய அணியின் டெஸ்ட் ஜாம்பவானாக திகழ்ந்த விவிஎஸ் லக்ஷ்மனுக்கு மாற்றான வீரரைத் தேடும் பணியிலிருந்து பிசிசிஐக்கு கிடைத்த முதல் பெயர் ரஹானே தான். அப்படி இந்திய அணிக்குள் காலடி எடுத்து வைத்த ரஹானே இக்கட்டான நேரத்தில் இந்திய அணியை பல நேரங்களில் வெற்றி பெறச் செய்து தனது பணியை சிறப்பாகவே செய்து வருகிறார்.
ஆனால் இவர் முதன் முதலில் அறிமுகமாகியது டி20 போட்டியில் தான். 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் தொடக்க வீரராக ரஹானே தேர்வு செய்யப்பட்டிருந்தார். அத்தொடரின் மான்செஸ்டரில் நடைபெற்ற டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹானே 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இந்திய அணியில் தொடர்ந்து ரஹானே இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவுட் ஆஃப் ஃபார்ம் மற்றும் டி20 அணியில் இடம் பெற கடுமையான போட்டி இருந்ததால் இந்தியாவுக்காக 20 டி20 போட்டிகளில் மட்டுமே ரஹானேவால் விளையாட முடிந்திருந்தது.
அதேபோல் இந்திய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள ரஹானே 3 சதங்கள், 24 சதங்கள் எடுத்திருந்த நிலையிலும் அவரால் தனது இடத்தை தக்க வைக்க முடியவில்லை. ஆனாலும் துவண்டு போகாத ரஹானே தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டே இருந்தார். ஆனால் எப்போதும் ரஹானேவின் திறமை மீது தேர்வாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஏனென்றால் ரஹானேவின் ஆட்டத்திறன் அப்படிப்பட்டது.
சச்சினுக்கு பிறகு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களை நேர்த்தியாக கையாளத் தெரிந்த வீரர்களின் ரஹானேவின் பெயர் எப்போதும் இருக்கும். பல இந்திய வீரர்கள் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தடுமாறிய சூழ்நிலையில், ரஹானே வெளிநாட்டு களத்தில் நின்று சம்பவம் செய்து காட்டினார்.
தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்க, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அதன் சொந்த மண்ணிலேயே ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது இதற்கான சான்று.
தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்திச் வரும் விராட் கோலியும் ஓய்வு நேரங்களில் தனது பணியை ரஹானேவிடம் ஒப்படைத்து செல்வார். ஏனெனில் பேட்டிங் மட்டுமின்றி கேப்டன்சியில் ரஹானே தனி இடத்தைப் பிடித்தவர் என்பதால் தான்.
இதற்கு எடுத்துக்காட்டாக கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரிலிருந்து கோலி, இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ், ரோஹித் சர்மா என முன்னணி வீரர்கள் இல்லாத போதும், இளம் மற்றும் அனுபவமில்லாத வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத் தந்த பெருமை ரஹானேவையே சேரும். எப்போதும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாத ரஹானே, பேட்டிங் என வந்து விட்டால் மட்டும் தனது அதிரடியான ஆட்டத்தால் எதிரணி பந்துவீச்சாளர்களை மிரள வைத்தார்.
இதுவரை இந்திய அணிக்காக 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 12 சதங்கள், 23 அரைசதங்கள் என மொத்தம் 4,538 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இந்திய டெஸ்ட் அணியை ஐந்து முறை வழிநடத்தியுள்ள ரஹானே ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்காமல் 4 வெற்றி, ஒரு டிரா என சிறப்பாக வழிநடத்திய கேப்டன் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
ஒருவேளை இந்திய அணியின் கேப்டன்ஷிப் பதவியை பிசிசிஐ மேற்கொண்டால் டெஸ்ட் அணிக்கான கேப்டன் தேர்வில் முதலிடம் பெறுபவர் ரஹானே என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இப்படி சர்வதேச டெஸ்ட் அரங்கில் பல சாதனைகளை படைத்து வரும் ரஹானே இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ஐசிசி, பிசிசிஐ உள்பட கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.