#OnThisDay: ரசிகர்களை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய போட்டி; உலக கோப்பையை கையிலேந்திய இங்கிலாந்து!
கடந்த 2019ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 14) இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.
அதில் அதுநாள் வரை கோப்பையை வெல்லாத இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலபரீட்சை நடத்தின. இந்த வரலாற்று சிரப்புமிக்க போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பைத் தொடரை வென்றதில்லை. இதனால், எந்த அணி கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில், கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தன.
அப்படி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இப்புக்கு 241 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்றி நிக்கோலஸ் 55 ரன்களை எடுத்திருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், லியம் பிளங்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தாலும், பென் ஸ்டோக்ஸ் - ஜோஸ் பட்லர் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி மெல்லமெல்ல அழைத்து சென்றது.
இப்போட்டி அரைசதம் கடந்த இருவரும் இங்கிலாந்து அணியின் கோப்பை கனவை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்தனர். இருப்பினும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், போல்ட்டின் கடைசி ஓவரின் இரண்டு பந்துகளிலும் ரன் இல்லை.
ஏனினும் மூன்றாவது பந்தில் ஸ்டோக்ஸ் சிக்சருக்கு பறக்கவிட்டார். அதைத்தொடர்ந்து, அதற்கு அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தபோது, ஓவர் த்ரோவில் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்ட்ரிக்கு சென்றது.
இதனால் கடைசி இரண்டு பந்தில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், இரண்டாவது ரன் ஓடும்போது அடில் ரஷித் ரன் அவுட் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் இரண்டு ரன் தேவைப்பட்ட நிலையில், மார்க் வுட்டும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டம் டையில் முடிந்துள்ளது.
ஆட்டம் டையில் முடிந்ததால், போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் - பென் ஸ்டோக்ஸ் இணை அதிரடியாக விளையாடி 15 ரன்களை சேர்த்தது.
அதைத்தொடர்ந்து 16 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 14 ரன்கள் எடுத்தது. இதனால், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஸ்ட்ரைக்கில் இருந்த கப்தில் இரண்டாவது ரன் ஓடும் போது ரன் அவுட் ஆனார். இதனால் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்தது.
கிட்டத்தட்ட இப்போட்டி நடைபெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் இப்போட்டியின் விறுவிறுப்பு நிரைந்த இன்னிங்ஸ்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் கிரிக்கெட் போட்டியாக சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி..!