#Onthisday: இங்கிலாந்து மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றெடுத்த இந்தியா!
இங்கிலாந்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. பரபரப்பான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இறுதி வரை போராடி கடைசி ஓவரில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
எட்டு அணிகள் பங்குபெற்றிருந்த இத்தொடரில் குரூப் ஏ, குரூப் பி என இருகுழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், இந்தியா, தென் ஆப்பிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றிருந்தன.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறின. அதேசமயம் பங்குபெற்ற 4 லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஒரே அணியாக இந்திய அணி திகழ்ந்தது. ஷிகார் தவான் பேட்டிங்களிலும், ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் கோப்பை கனவை உறுதிசெய்தனர்.
இதையடுத்து இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியும், அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடினர். இப்போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஐம்பது ஓவர்கள் கொண்ட போட்டி இருபது ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. மழையின் காரணமாக, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 33 ரன்களை எடுத்திருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ரவி போபாரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
அதன்பின், களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், இந்திய அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறினர். அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த இங்கிலாந்து அணி கடைசி ஓவர் வரை போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.
இதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வீழ்த்தி, சாம்பியன்ஸ் கோப்பையை தன்வசப்படுத்தியது. மேலும் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசியின் அனைத்து விதமான தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையையும் படைத்தார்.
மேலும் இத்தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான், 363 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும், கோல்டன் பேட்டையும் தன்வசமாக்கினார். அதேபோல் பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவருக்கான கோல்டன் பந்தை தன்வசப்படுத்தினார்.
இச்சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் (ஜூன் 23) 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.