சுழற்பந்துவீச்சின் ஜாம்பவான் ஷேன் வார்னே !

Updated: Tue, Jul 19 2022 17:16 IST
Top Magic Moments Of Shane Warne's Career (Image Source: Google)

உலகின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஓய்வுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக இருந்த வார்னே சமீபத்தில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தங்கியிருந்த விடுதியிலேயே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 52 ஆகும்.

இந்நிலையில் உலகையே வியக்கவைத்த அவரின் கிரிக்கெட் சாதனைகள் குறித்து பார்க்கலாம். ஷேன் வார்னே கடந்த 1992ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் முதன் முதலில் அறிமுகமானார். அன்று தொடங்கி 16 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்துவீச்சில் மன்னனாக திகழ்ந்துள்ளார்.

அதன்படி மொத்தமாக 339 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1,001 விக்கெட்களை சாய்த்துள்ளார். அவரின் சராசரி 25.51 மட்டுமே ஆகும். இதில் 38 முறை 5 விக்கெட் ஹவுல் எடுத்துள்ளார். 10 முறை 10 விக்கெட்களையும் சாய்த்த பெருமை பெற்றவர். சர்வதேச அளவில் இதுவரை 2 வீரர்கள் மட்டுமே 1000 விக்கெட்கள் எடுத்துள்ளனர். அதில் வார்னேவும் ஒருவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் ஷேன் வார்னே 2ஆவது இடத்தில் உள்ளார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முதலில் 700 விக்கெட்களை கடந்தவர் என்ற பெருமை வார்னேவையே சேரும். 

ஆனால் அவருக்கு பின்னர் தான் முத்தையா முரளிதரனே அந்த மைல்கல்லை எட்டினார். இதுமட்டுமல்லாது இன்று வரை 700 விக்கெட்களை தொட்ட ஒரே ஒரு ஆஸ்திரேலிய வீரர் வார்னே மட்டுமே ஆகும்.

5 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றி சுழற்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஷேன் வார்னே 3வது இடத்தில் உள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது வார்னே 40 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அப்போது அவருடைய சராசரி 19.92 மட்டுமே ஆகும்.

2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வார்னேவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. சென்னைக்கு தோனி, டெல்லிக்கு சேவாக், மும்பைக்கு சச்சின், ஐதராபாத்துக்கு கில்கிறிஸ்ட், பஞ்சாப்க்கு யுவராஜ் என ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக இருந்தன.

ஆனால் வார்னே தலைமையிலான அணியின் குறிப்பிட்டு சொல்லும் அளவு எந்த வீரரும் இல்லை. ராஜஸ்தான் அணி எல்லாம் சுத்த வேஸ்ட் என்று வெளிப்படையாக பலரும் கருத்து தெரிவித்தனர். கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக கேப்டனாகவும், பயிற்சியாளராகவும், பந்துவீச்சாளராகவும் ஒரே ஆளாக வார்னே களமிறங்கினார்.

வார்னேவின் பயிற்சியில், ராஜஸ்தான் அணி ஜாம்பவான்கள் அணியை துவைத்து போட்டது. ஜடேஜா, யூசுப் பதான் போன்ற வீரர்களை அடையாளப்படுத்திய வார்னே, அவர்களை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு சென்றார். வாட்சனுக்கு பேட்டிங்கும் தெரியும் என்று உணர வைத்தவர் வார்னே தான்.

அப்போது யாருமே எதிர்பாராத ராஜஸ்தான் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதியது. இதில் யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள், ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என்று..!! கோப்பையை வாங்கிய வார்னே, ஜடேஜாவை ஒரு ராக் ஸ்டார் என்று பாராட்டினார். 

அது தற்போது உண்மையாகிவிட்டது. வார்னேவை, அப்போது 2011 உலககோப்பைக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கும் படி ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது நிறைவேறவில்லை.

இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேன் வார்னே 708 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்களை கைப்பற்றியவர். ஐபிஎல் தொடரிலும் வார்னே விளையாடியுள்ளார். 55 போட்டிகளில் ஆடி 57 விக்கெட்களை எடுத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை