அண்டர் 19 உலகக்கோப்பை நாளை முதல் தொடக்கம்!

Updated: Thu, Jan 13 2022 22:07 IST
14th ICC Under-19 World Cup starts tomorrow! (Image Source: Google)

19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 1988ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

கடைசியாக 2020ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

இதுவரை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டி 13 முறை நடந்துள்ளது. இதில் இந்தியா அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்றது. ஆஸ்திரேலியா 3 தடவையும், பாகிஸ்தான் 2 தடவையும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றின.

இந்நிலையில் 14ஆவது அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நாளை தொடங்கி, பிப்ரவரி 5ஆம் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் வங்கதேசம் உள்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்று உள்ளன.

அதன்படி இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய நாடுகளும் இப்பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 15ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. அதைத்தொடர்ந்து அயர்லாந்துடன் 19ஆம் தேதியும், உகாண்டாவுடன் 22ஆம் தேதியும் மோதுகிறது.

நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் இந்த தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா, மற்றும் ஸ்காட்லாந்து-இலங்கை (குரூப் ‘டி’) அணிகள் மோதுகின்றன.

ஆண்டிகுவா, கயானா, செயின்கிட்ஸ், டிரினிடாட் ஆகிய 4 மைதானங்களில் இத்தொடர் நடக்கிறது. மேலும் இத்தொடரின் இறுதிப் போட்டியானது பிப்ரவரி 5ஆம் தேதி ஆண்டிகுவாவிலுள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை