1st Test, Day 3: இந்திய அணி 436 ரன்களில் ஆல் அவுட்; அதிரடியாக ரன்களை குவிக்கும் இங்கிலாந்து!

Updated: Sat, Jan 27 2024 11:46 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோஸ் 70 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களையும், பென் டக்கெட் 35 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 119 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து தொடர்ந்த தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், ஷுப்மன் கில் 14 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கினர்.

இதில் ஜெய்ஸ்வால் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோ ரூட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லும் 23 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 86 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் ரவீந்திர ஜடேஜா ஒருபக்கம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்களைக் குவித்தது. இதையடுத்து இன்று தொடங்கிய் மூன்றாம் நாள் ஆட்டத்தை ரவீந்திர ஜடேஜா 81 ரன்களுடனும், அக்ஸர் படேல் 35 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா 87 ரன்களில் ஆட்டமிந்தார். 

அதன்பின் அக்ஸர் படேல் 44 ரன்களிலும், பும்ரா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸாக் கிரௌலி 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 31 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் அதிரடியைக் காட்ட தொடங்கிய பென் டக்கெட், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் முறையில் எதிர்கொண்ட ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களைச் சேர்த்துள்ளது, இதில் பென் டெக்கெட் 38 ரன்களுடனும், ஒல்லி போப் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை